ஈழமணித்திருநாட்டில் யாழ்பாடியால் பெருமை பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க சங்கானை எனும் குக்கிராமத்தில் தம்பு செல்லாச்சி தம்பதிகளின் இறுதி செல்ல மகனாக ஐயாத்துரை 03.11.1913 பிறந்தார். 
ஐயாத்துரை என்ற செல்ல மகன்  கரைபுரண்ட கால வெள்ளத்தில் கரைந்து சங்கானை சண்டியன் செல்வம் என்ற புனை பெயரே இறுதி மூச்சு வரை நிலை பெற்றது .


இளமையில் வீரவிளையாட்டுக்கள் பலவற்றில்   தேர்ச்சி பெற்று தலை சிறந்த வீரராகத் திகழ்ந்தார் ( சிலம்பம்,கலரி, வாள்வீச்சு).
“வித்தை கற்றவனுக்கு விசனம் சத்துரு” என்ற முது மொழிக்கு இவரே இலக்கணம் வகுத்தார் அன்றைய காலகட்டத்தில் இவரை கைது செய்ய வந்த காவல் அதிகாரியை வாளால் வெட்டியதன் விளைவு ஏழாண்டு காலம் கொடுமை நிறைந்த சிறைவாசம் அனுபவித்தார்.


சிறையில் இருந்த காலத்தில் சிங்கள மொழியை சரளமாக பேசக் கற்றுக்கொண்டார். அத்துடன் கயிறு பின்னுதல் தும்புக்கட்டை கட்டுதல் போன்ற சிறு கைத்தொழில்களையும் கற்றுக்கொண்டார். அங்கு இவர் தூக்கு தண்டனை கைதிகளின் தூக்கு கயிற்றை இயக்குகின்ற பொறிமுறையை சுத்தம் செய்து சரிபார்க்கின்ற பொறுப்பையும் வகித்து வந்தார். அதிகாலையில் தூக்கு மேடைக்கு செல்லும் கைதி படும் துயரமும் அழுகையும் சொல்லி மாளாது என்று பின்னாளில் கதை கதையாக சொல்லுவார்.
சிறை மீண்டு வீடு வந்த இவர் தனக்கான தொழிலாக சங்கானை சந்தையில் ஓர் தேனீர்க் கடையை அமைத்துக் கொண்டார்.

தாய் மீது கொண்ட அளவற்ற பாசத்தின் விளைவாக திருமண வாழ்வை மறுத்து தாயை தெய்வமாக பராமரித்து வந்தார். 
இயற்கை அன்னை செல்லாச்சி தாயை தன்னுடன் அரவணைத்த போது இவருக்கு வயது முப்பத்தாறு(36). அன்னையின் நினைவாக அவர் பாவித்த உடுப்பு ,சீலை, இறந்த பின் பெறப்பட்ட அஸ்தியில் சிறிது, பற்கள் போன்றவற்றை  தனித்தனியாக சிறு பெட்டியில் போட்டு தெய்வங்களுக்கு சரிசமமாக தனது இறுதிக் காலம் வரை வணங்கி வந்தார்.
முப்பத்தி ஏழாவது(37) வயதில் வாழ்க்கை துணையாக யாழ் மாவட்டத்தில் புகை இலைக்கு பெயர் பெற்ற கோண்டாவிலில் வாழ்ந்த பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் மகள் பரமேஸ்வரியை (வயது 18)திருமணம் செய்து இல்லற வாழ்வில் தன்னையும் சமூகப் பொறுப்புள்ள மனிதனாக மாற்றி குடும்ப வாழ்வில் இணந்தார்.


 இன்று இருப்பது போல் அன்றும் மாப்பிள்ளையின் குணம், நடத்தைகளை மாமனர் பொன்னையர் சங்கானை வந்து மீள்பரிசீலனை செய்த போது கிடைத் தகவல்களைக் கண்டு ஆச்சரியப்படவில்லை, மாறாக இப்படி ஓர் மாப்பிள்ளை தான் தனது மகளுக்கு ஏற்றவர் என்று உறுதி படக்கூறியதாக செய்திகள்..
இன்றைய சமூக அமைப்பில் சமூகமும் அங்கீகரிக்காது . பிறந்த பிள்ளைகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று மிட்டாசு கவிஞன் பாரதி பாடிச் சென்றதுக்கு நேர் எதிர் மாறாக வாழ்ந்து தனது சொத்துகளை அழித்து அதில் தனது ஜாதிய கட்டுமானத்தை நிலைநாட்ட இறுதி வரை போராடினார். இந்த செயற்பாடு மனிதநேய செயற் பாட்டாளர்களின் பார்வையில் விமர்சனத்திற்கு உரியது. ஆனால் அன்றைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் தவிர்க முடியாமல் போனதும் கூட…
தனித்த வீரனாக தேனீர் கடை செல்வம் என்ற பெயர் இலங்கை பாராளுமன்றம் வரை ஓங்கி ஒலித்தது. அன்றய பாராளுமன்ற உறுப்பினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் வரிகளில் ஆவணப்பதிவாக இன்றும் பாரளுமன்ற பதிவுகளில் உள்ளது. ( மண் சுட்டியுடன் தேனீர் 20 சதம்).

மூன்று முறை முத்தமிட வந்த துப்பாக்கி குண்டுகளே அவர் மேனி கண்டு அஞ்சியது.
தீர்கதரிசி முன்கூட்டியே கணிப்பதில் அவருக்கு நிகர் அவரே!!!!
பொதுத் தொண்டே வாழ்நாள் தொழில், சட்ட வல்லுனர்களுக்கே சட்ட நுணுக்கம் கற்று கொடுத்த படிக்காத மேதை…
மருமகளுக்கு நடை பெற்ற திருமணத்தில் தேங்காய் உடைக்கின்ற உரிமை மறுக்கப்பட்டதால் திருமணத்தில் இருந்து வெளியேறி பன்னிரண்டு ஆண்டுகள் , பேர் சொல்ல இருந்த ஓர் அக்கா குடும்பத்தையும் துறந்து வாழ்ந்தார்.
துப்பாக்கி குண்டுகளுக்கு அவர் கடை கதவுகளே சாட்சியாக, அவர் இறக்கும்வரை கதவுகள் மாற்றப்பட்டதிற்கான அறிகுறிகள் இல்லை.

சூரியப்புதல்வன் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான் கிருஷ்ணனின் சூழ்ச்சியின் காரணத்தால் எல்லாவற்றையும் இழந்து உயிர் துறந்தான்.
தேனீர் கடை செல்வமும் துப்பாக்கி,வாள், சிலம்ப கம்பு உடனே வாழ்நாளைக் கழித்தார்.
இறை நம்பிக்கையின் உறைவிடம்  தீட்சை கேட்டவர். முருகபக்தர் ஒவ்வோர் வெள்ளிகிழமைகளிலும் அதி காலை 3மணியளவில்  துவிச்சக்கர வண்டியில் நல்லூர் சென்று முருகனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதன் காரணமாக பிறந்த எல்லா ஆண்மகவுக்கும் முருகநாமத்தை பெயர்களில் பதியமிட்டார் குகன்,குமரன்,சடாச்சரம், பவன்,பரன்,குலதிலகன். பெண் பிள்ளைகளுக்கு புனிதரேகா, ரவிரேகா, ஜெனகரேகா, என்றும் இறுதி பெண்பிள்ளைக்கு மீனலோஜினி என்றும் பெயர் இட்டார்.
இறுதிவரை தான் நம்பிய நம்பிக்கைக்கு விசுவாசமாக வாழ்ந்தார். ஒவ்வோர் வெள்ளிக்கிழமையும் விரதம், அமாவாசை, பவுர்ணமி விரதம் இருந்தார்.


ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது அற்றைய முதுமொழி 
பத்து பிள்ளை பெற்ற செல்வமும் ஆண்டியாய் நின்றது அன்று…..
முருகனே ஆண்டியாய் பழனியில் நின்றான், அவனால் உயிர் பெற்ற நான் எம்மாத்திரம் என்ற இறுமாப்பு.. 
வாழ்கை சக்கரம் சுழன்றது பிள்ளைகளின் வளர்ச்சியின் விளைவு அதிஸ்ட தேவதை அவர் குடும்பத்தின் மீதும் கடைக் கண் பார்வையை பதியமிட்டது. விளைவு மூன்று மருமக்களையும், மூன்று மருமகள்களையும் எட்டு பேரக்குழந்தையையும் இயற்கை பரிசாக கொடுத்தது. குடும்பத்தினர் குதூகலித்து மகிழ்ந்த நிலையில் ,இயற்கையின் நியதி முதுமையும் நோய்களும் கூடவே செல்வம் என்ற மாமனிதனின் உடலில் குடியமர்ந்தது.
ஜோதிடத்தில் நம்பிக்கையும் ஓர் அளவு தேர்சியும் பெற்ற அவர் தனது இறுதிக் காலத்தையும் கணித்திருந்தார்.
விளைவு அவரது 78வது வயதில் 07.06.1991 வெள்ளிக்கிழமை செல்வம் என்ற ஆழுமையின் பூத உடலை இயற்கை ஜம்பூதங்களுடன் ஐக்கியமாக்கி கொண்டது.
செல்வம் என்ற ஆழுமையின் நினைவுகளை மனதில் சுமந்தபடி விழுதுகளாகிய நாம் பயணிப்போம்.

குறிப்பு : பதிவுகள் அவரின் வாய்மொழி செய்திகளும், 1963ம் ஆண்டில் இருந்து செயற்பாடுகளில் கலந்துகொண்ட மனிதர்களின் ஒப்புதல் வாக்கு மூலமும் அடங்கும்…..

ஆக்கம்,
சக்திசடாச்சரம் ஐயாத்துரை.